மோடி முன்னிலையில் ஹெச்.ராஜா பட்ட அவமானம்!

பிரதமர் மோடியின் பேச்சை, தமிழில் தவறாக மொழிபெயர்த்ததன் மூலமாக, ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


பாஜக.,வின் தேசிய செயலாளர் பதவியில் இருப்பவர் ஹெச்.ராஜா. வட இந்தியராக இருந்தாலும், இவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக, தமிழகத்திலேயே வசித்து வருகின்றனர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தமிழில் பேசுவதும், அதற்கு சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விமர்சனம் தெரிவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

 

  தற்போதைய தமிழக அரசியல் சூழலில், சர்ச்சையின் நாயகன் என்றால், ஹெச்.ராஜாதான். அந்தளவுக்கு புதுப்புது சர்ச்சைகளில் நாள்தோறும் அவர் சிக்குகிறார். குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டு பாஜக தலைவர் அமித் ஷாவின் பேச்சை, இந்தியில் இருந்து, தமிழுக்கு ஹெச்.ராஜா மொழிபெயர்த்தார். அப்போது, அவர் சொட்டுநீர்ப் பாசனம் என்று சொல்வதற்குப் பதிலாக, சிறுநீர்ப் பாசனம் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

 

   இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் மிகக் கடுமையாக, ஹெச்.ராஜா விமர்சிக்கப்பட்டார். இந்த சூழலில், தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, சென்ற ஞாயிறன்று பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் பேச, அதனை ஹெச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். 

 

பேச்சின் இடையே, ராமேஸ்வரத்தையும், பாம்பன் மற்றும் தனுஷ்கோடியையும் இணைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனை தமிழில் மொழிபெயர்த்த ஹெச்.ராஜா, தவறுதலாக, ரூ.2,100 கோடி என்பதை, ரூ.21,000 கோடி என்று சொல்லிவிட்டார். இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் காட்டமாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

   ஹெச்.ராஜாவின் தவறான மொழிபெயர்ப்பு அடங்கிய வீடியோ காட்சி, தற்போது வைரலாகப் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.