பிரபல நடிகை லீனா மீது துப்பாக்கிச் சூடு! பட்டப்பகலில் பயங்கரம்!

பிரபல நடிகை லீனா மீது பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    பிரபல நடிகை லீனா மீது பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   கேரளாவை சேர்ந்தவர் லீனா மரிய பால். இவர் மோகன் லாலில் ரெட் சில்லீஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்தியில் ஜான் ஆபிரஹாமுடன் மெட்ராஸ் கஃபே எனும் படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா எனும் மலையாள படம் இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

   கடந்த 2013ம் ஆண்டு பல்வேறு மோசடி வழக்குகளில் லீனா கைது செய்யப்பட்டார். அதுவும் சென்னையை சேர்ந்த பலரை ஏமாற்றியதாக லீனாவை தமிழக போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த வழக்குகளில் இருந்து லீனா விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கேரளாவின் கொக்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பியூட்டி பார்லர்களை லீனா நடத்தி வருகிறார். 

   இந்த நிலையில் கொச்சியின் பரபரப்பான பனம்பில்லி நகரில் லீனாவுக்கு சொந்தமான பியூட்டி பார்லர் ஒன்று ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த வணிகவளாகத்தில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி இரண்டு பேர் வந்தனர். வாகனத்தை ஓட்டி வந்தவர் வெளியே காத்திருக்க, பின்னால் அமர்ந்திருந்தவர் நேராக சென்று லீனாவின் பியூட்டி பார்லருக்குள் நுழைய முயன்றார். ஆனால் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தினார்.

   இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் தனது துப்பாக்கியை காட்டி காவலாளியை மிரட்டினார். இதனால் பதறிப்போன அந்த காவலாளி மேலும் சிலரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக மர்ம நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் இல்லை. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது நடிகை லீனா பியுட்டி பார்லரில் இருந்ததாக கூறப்படுகிறது.

   இதனிடைய மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரியின் ஆட்கள் தான் லீனா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. லீனாவிடம் ரவி பூஜாரி ஆட்கள் பணம் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்ய முயற்சி நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கூறி வருகின்றனர். அண்மைக்காலமாக மும்பை நிழல் உலக தாதாக்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.