பச்சை..! மஞ்சள்..! சிவப்பு மாவட்டங்கள்..! செவ்வாய் கிழமையுடன் ஊரடங்கை வாபஸ் பெறுகிறது மத்திய அரசு!

சில விதிவிலக்குகளுடன் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வரும் செவ்வாய் கிழமை இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒடிசா, பஞ்சாப் மாநிலங்கள் ஏப்ரல் 30ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்துவிட்டன. டெல்லி, தெலுங்கானா மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள்ளேயே இருப்பதாக மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பரவல் அபரிமிதமாக இல்லை. இதனால் ஒட்டு மொத்தமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்கிறார்கள். அதே சமயம் நோய் பரவல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இதனால் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு நிறத்தை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 15 பேருக்கு மேல் கொரோனா நோயாளிகள் உள்ள மாவட்டத்தை சிவப்பு நிறத்தில் குறிக்க முடிவெடுக்கப்பட்ள்ளது. இதே போல் 15 பேருக்கு கீழே கொரோனா நோயாளிகள் உள்ள மாவட்டத்திற்கு மஞ்சள் நிறம்.

கொரோனா நோயாளிகளே இல்லாத மாவட்டங்கள் பச்சை நிறைத்தில் குறிப்பிடப்படும். அதன்படி பச்சை நிற மாவட்டத்தில் அனைத்துவிதமாக கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் இயல்பாக வாழ்வை வாழ அனுமதிக்கப்படுவார்கள் இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லை.

இதே போல் 15 பேருக்கும் குறைவான கொரோனா நோயாளிகளை கொண்ட மாவட்டங்கள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்படுவதன் இங்கு பொதுப் போக்குவரத்திற்கு தடை தொடரும். ஆனால் கடைகளை வழக்கம் போல் திறக்க, மக்கள் அலுவலகங்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம் கொரோனா நோயாளிகள் 15க்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் சிவப்பு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.

இந்த அடிப்படையில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன நிறம் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் தான் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும். அதே சமயம் மாநில அளவிலான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அடுத்த 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கும்.