எனக்கு எல்லாம் அது தான்..! சினைப் பசுவை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த சரோஜா பாட்டி! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினைப்பசுவை காப்பாற்ற சென்ற மூதாட்டியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தாலுக்காவில் ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெரு‌ அமைந்துள்ளது. இந்த தெருவில்  தங்கையன் என்கிற செல்லப்பன் மனைவி சரோஜா உடன் வசித்து வருகிறார். சரோஜாவிற்கு வயது 53. இவர்களின் வீட்டுக்கருகில் இவர்களுக்கு சொந்தமான விளைச்சல் நிலம் இருக்கிறது.

ஆகையால் தன் வீட்டில் வளரும் மாடுகளை மேய்ப்பதற்காக தினம்தோறும் அந்த விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் செல்வார் அந்த வயது முதிர்ந்த மூதாட்டி சரோஜா. அப்படியாக நேற்றையதினம் மாலைப்பொழுதில் சரோஜா தனக்கு சொந்தமான சினைப்பசுவை விளை நிலத்திற்கு ஓட்டிச்சென்று இருக்கிறார். 

 அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சினைப்பசு அறுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்தப் பசு உயிருக்கு போராடிக்கொண்டு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளது. சினைப் பசு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வயது முதிர்ந்த சரோஜா அம்மாள் மனம் தாங்காமல் அதனை காப்பாற்றுவதற்காக ஓடியிருக்கிறார்.

மின்சார கம்பியில் சிக்கி தான் அந்த சினைப்பசு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத அந்த மூதாட்டி சரோஜா , அதனை காப்பாற்றுவதற்காக மின்சார கம்பியை தன் கையால் தொட்டு தூக்கி எறிய முயற்சி செய்திருக்கிறார். அப்போது அந்த மின்சார கம்பியில் இருந்து வெளிவந்த அதிவேக மின்சாரம் அந்த மூதாட்டியின் உடலில் பாய்ந்தது.

இதனால் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டி சரோஜா அவர்களின் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த சினைப்பசுவின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.