ஆசை ஆசையாக செல்லமாக வளர்த்த பாட்டிக்கு வீடியோ கான்பிரன்சில் இறுதிச் சடங்கு செய்த பேரன்..! சென்னை டூ உசிலம்பட்டி பரிதாபம்! ஏன் தெரியுமா?

சென்னை: செல்லமாக வளர்த்த பாட்டிக்கு வீடியோ கால் மூலமாக அவரது பேரன் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் சிவனம்மாள். 103 வயதான இவர், விளாங்குடியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இவரது மற்றொரு மகன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவரது மகனான கார்த்திக்கை சிறுவயது முதலே சிவனம்மாள் ஆசையாக வளர்த்து வந்தார்.

தற்போது கார்த்திக் வளர்ந்து படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இப்படி பாசமான பாட்டியும், பேரனும் பிரிந்திருக்கும் சூழலில், கொரோனா வைரஸ்க்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்திக் சென்னையிலேயே முடங்கியுள்ளார். சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. 

இதற்கிடையே, பாட்டி சிவனம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால், இறுதிச்சடங்கில் கார்த்திக் நேரடியாக வர முடியாமல் போனது. வேறு வழியின்றி வீடியோ கால் மூலமாக அழுதபடியே பாட்டிக்கு பேரன் கார்த்திக் இறுதிச்சடங்கு செய்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக சிவனம்மாள் குடும்பத்தினர் மட்டுமே அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இந்த சம்பவம் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.