மும்பையில் இருந்து 1000கிமீ நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரி இளைஞர்..! அவர்களுக்கு திருச்சியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சுமார் 1000 கிலோ மீட்டர் நடந்தே வடமாநிலத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 , பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி முடித்த பட்டதாரி இளைஞர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் இந்த இளைஞர்கள் அவர்களது சொந்த ஊருக்கு வந்து செல்வர்.

இன்னிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த பட்டதாரி இளைஞர்கள் பணி செய்துவரும் வேளாண் நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு சென்று விடுமாறு அவர்கள் கூறியிருக்கின்றனர். 

இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். செய்வதறியாது திகைத்து நின்ற அந்த இளைஞர்களில் 7 பேர் மட்டும் நடந்தே அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று யோசனை செய்துள்ளனர். அவர்கள் 7 பேரும் ஒன்றாக இணைந்து மும்பையிலுள்ள சோலாப்பூரிலிருந்து நடந்தே ஊருக்கு செல்ல கடந்த 29ஆம் தேதி புறப்பட்டுள்ளனர். 

இரவு நேரத்தில் சாலையோரங்களில் கிடைக்கும் இடங்களில் படுத்தும் பகல் நேரத்தில் வேகவேகமாக தங்களுடைய சொந்த ஊருக்கும் இந்த இளைஞர்கள் நடந்து வந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த இவர்கள் சுமார் 1000 கிலோ மீட்டரை கடந்து உள்ளனர். நேற்றைய தினம் இவர்கள் 7 பேரும் திருச்சியிலுள்ள முசிறி பகுதியை சேர்ந்துள்ளனர்.

முசிறியில் அருண் என்பவர் இந்த ஏழு பேரையும் பார்த்து விசாரணை செய்து இருக்கிறார். அப்படி விசாரித்தபோது இவர்கள் 7 பேரும் மும்பையில் இருந்து நடந்தே வந்துள்ளனர் என்பதை பற்றி அறிந்து கொண்டார். திருச்சி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு அவரிடம் நடந்தவற்றை கூறி இந்த இளைஞர்களுக்காக உதவி கேட்டிருக்கிறார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு என்பவர் இந்த ஏழு பேருக்கு தேவையான வாகன வசதியும் செய்து தருமாறு உத்தரவிட்டிருக்கிறார். பின்னர் அவர்கள் எழுப்பியிருக்கும் தேவையான வாகன பாஸ் முறையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.