மக்கள் விவசாய கம்பெனியை, தமிழக அரசு உருவாக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வேண்டுகோள்

விவசாயிகள் நன்மைக்காக மக்கள் விவசாய கம்பெனியை, தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியணஹள்ளியில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டம் வெற்றி பெற்றால், விவசாயிகளை கார்பரேட்டுகள் அடிமையாக்குவர். 

மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை, மத்திய அரசு சட்டம் இயற்ற, எந்த அதிகாரம் உள்ளது. இதை, தமிழக முதல்வர் பழனிசாமி, நல்ல சட்டம் என எப்படி ஏற்றுக் கொள்கிறார். 

கொரோனா காலத்தில், 23.9 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும், 3.5 சதவீதம் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டம் செல்லாது என, அறிவிக்க வேண்டும். அல்லது தனி சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும். 

மக்கள் விவசாய கம்பெனியை, தமிழக அரசு உருவாக்கி, அதில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும். அப்போது தான், விவசாயிகள் அடிமைகள் ஆவது தடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.