விவசாயிகளுக்கு மீன்டும் அதிர்ஷ்டம்... இப்போது நகைக் கடனும் தள்ளுபடி. அடிச்சுத்தூக்கிய எடப்பாடி பழனிசாமி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு அசர வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே பயிர்க் கடனை தள்ளுபடி செய்தவர் இப்போது நகைக் கடனையும் தள்ளுபடி செய்திருக்கிறார்.


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி இன்று சட்டசபையில் பேசினார். அப்போது, கொரோனாவால் விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறி பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க அம்மாவின் அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை.

இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும்,

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அம்மாவின் அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.