ஒரே நாளில் கிடுகிடு உயர்வு..! ஒரு சவரன் ரூ.31 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை! காரணம் என்ன தெரியுமா?

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 512 ரூபாய் உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதும் என்று மாறிக்கொண்டே இருந்தது. இதற்கு காரணம் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் என்று பொருளாதார நிபுணர்களால் கூறப்பட்டது.

புத்தாண்டு தொடங்கியவுடன் தங்கத்தின் விலை அசுர வேகத்தில்  உயர தொடங்கியது. 4-ஆம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா போர் தாக்குதல் மேற்கொண்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

நேற்று மாலை ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது 30,656 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,832 ரூபாயாக இருந்தது. இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 64 ரூபாய் உயர்ந்து, 3,896 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 512 ரூபாய் உயர்ந்து 31,068 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. 

புத்தாண்டு தொடங்கியதிலிருந்து ஒரு கிராம் தங்கம் 160 ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்கம் 1,280 ரூபாயும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையும் 1.30 உயர்ந்து 52.30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1300 ரூபாய் உயர்ந்து  52,300 ரூபாயாக உள்ளது.