மீனவரை காதலித்து கல்யாணம் செய்த பெண் என்ஜினியர்! காவல் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

மீனவரை காதலித்து திருமணம் செய்த பெண் என்ஜினியருக்கு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் மிகப்பெரிய கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.


  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் டயானா. இவர் பி.இ முடித்துவிட்டு எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரான விஜயராஜூடன் காதல் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் காலம் முதலே விஜயராஜை காதலித்து வந்த டயானா அவரையே திருமணம் செய்து கொள்வது என்பதில் உறுதியாக இருந்தார். இவர்கள் காதல் விவகாரத்தை அறிந்த டயானா பெற்றோர் மீனவரான விஜயராஜை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து டயானாவுக்கு வேறு இடத்திலும் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

  இதனை அறிந்த விஜயராஜ் கடந்த செப்டம்பர் மாதம் டயானாவை அழைத்துச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் டயானாவுன் சேர்ந்து வாழ்வதற்கான ஏற்பாடுகளையும் விஜயராஜ் மேற்கொண்டார். வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயார் செய்த விஜயராஜ் சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி டயானாவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். குளச்சல் பகுதியில் புதிய வீட்டில் ஆயிரம் கனவுகனுடன் காதல் கணவருடன் டயானா தனது திருமண வாழ்வை தொடங்கினார். ஆனால் இந்த தகவல் அறித்ந டயானாவின் பெற்றோர் ரவுடிகளுடன் சென்று விஜயராஜை அடித்து உதைத்து டயானாவை தூக்கிச் சென்றுள்ளனர்.

மேலும் டயானாவை தூத்தூரில் உள்ள தங்கள் வீட்டில் அவரது பெற்றோர் அடைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விஜயராஜ் தனது மனைவியை மீட்டுத் தருமாறு குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டயானா மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்தனர். அப்போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தான் தனது காதலனுடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் டயானாவின் சான்றிதழ்களை போலியாக பதிவு அலுவலகத்தில் கொடுத்து திருமணம் செய்துள்ளதாகவும், அந்த திருமணம் செல்லாது என்று டயானாவின் தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.

  மேலும் டயானாவின் தந்தையிடம் போலீசார் பணம் வாங்கிக் கொண்டு வீஜயராஜூக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது- போலி ஆவணங்கள் மூலம் திருமணம் செய்துள்ளதால் டயனாவை உன்னுடன் அனுப்ப முடியாது என்று கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பியுள்ளனர். ஆனால் தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்று டயானா கூறியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் வைத்து டயானாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் தரதரவென தரையில் போட்டு டயானாவை இழுத்து காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் டயானா மன உறுதியுடன் காரில் ஏறாமல் போராடினார்.

  இந்த காட்சிகளை அங்குள்ள சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இதனால் சுதாரித்த போலீசார் அங்கிருந்து நழுவினர். பின்னர் காதல் கணவரான விஜயராஜூடன் டயானா தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். காசு வாங்கி கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக டயானா தெரிவித்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் சாபம் விட்டபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.