டயாலிசிஸ் செய்துள்ள அம்மா! மருந்து வாங்க முடியாமல் கதறிய மகள்! உடனடியாக உதவிய முதலமைச்சர்! நெகிழ்ச்சி சம்பவம்!

டிக் டாக் மூலம் தனது தாயின் உயிரை மகள் காப்பாற்றிய சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.


கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் வசித்து வருபவர் பவித்ரா ஆரபவி. இவருக்கு வயது 18. இவருடைய தாயாரின் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் இவருக்கு மருத்துவர்கள் டயாலிசிஸ் பரிந்துரை செய்துள்ளனர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் இவர் தினமும் நான்கு விதமான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரால் உயிர் வாழ்வது கடினம். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தேவையான மாத்திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

பெங்களூருவில் அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. ஆனால் அவ்வளவு தூரம் எப்படி சென்று வாங்குவது என்ற வழி தெரியாமல் கண்ணீருடன் டிக் டாக் செய்து முதலமைச்சரிடம் உதவும்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ ஆரம்பித்த இந்த வீடியோ முதலமைச்சர் எடியூரப்பாவின் பார்வைக்கும் வந்தது. இந்த வீடியோவை கண்ட எடியூரப்பா பவித்ராவின் தாயாருக்கு உதவ உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவருக்குத் தேவையான மருந்துகளை நேற்று இரவு 11 மணிக்கு வீடு தேடி வந்து கொடுத்து சென்றுள்ளனர். 

தங்களது வீடு தேடி அவரது அம்மாவுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வந்ததை நினைத்து பவித்ரா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரின் மனங்களை நெகிழ வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.