எவ்வளவோ முயன்றும் கர்ப்பமாக முடியவில்லை..! கள்ளக்காதலனை திருப்தி படுத்த 25 வயது நஹானா செய்த நினைத்து பார்க்க முடியாத செயல்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பி பெண் ஒருவர் பிறந்து இரண்டே நாளான பச்சிளம் குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூருக்கு அருகேயுள்ள சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த ரோசின் சுல்தானா தனது மூன்றாவது பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா அனுமதிக்கப்பட்டுள்ள மகப்பேறு வார்டுக்குள் நுழைந்துள்ளார். 

அங்கு நுழைந்து சுல்தானாவிடம் பேச்சுக் கொடுத்த அந்த பர்தா அணிந்த பெண் தனது அக்காவும் இதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக மேல் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவளுக்கு ஆண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் ஆகையால் உங்களது குழந்தையை கொடுத்தால் நான் சிறிது நேரம் என் அக்காவிடம் காண்பித்துவிட்டு கொண்டு வருகிறேன் என கேட்டுள்ளார். 

இவரது பேச்சை நம்பிய ரோசின் சுல்தானா தனது ஆண் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். குழந்தையை கொடுத்து நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்ப வராததால் சந்தேகப்பட்டு சுல்தானா மருத்துவரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தனர்.

சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அந்த பர்தா அணிந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வதும் அந்த வீடியோவில் அந்த பர்தா அணிந்த பெண்ணின் முகம் தெரிந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் மூலம் அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த 25 வயதான நஹனா என்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்து சோதனை நடத்தியதில் துணிகளுக்கு அடியில் குழந்தையை மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த சம்பவத்திற்கு காரணமான நஹனாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வருகிறேன். நான் கர்ப்பம் அடையாத காரணத்தினால் அவர் என்னுடன் அடிக்கடி சண்டை போட்டு என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வந்தார். 

இதன் காரணமாக ஏதாவது ஒரு குழந்தையை கடத்தி அதை என் காதலனுக்கு பிறந்தது என்று கூறி நம்ப வைத்தால் அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்று திட்டமிட்டேன். இந்த திட்டத்தின் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக நான் கர்ப்பமாக இருப்பதாக கூறி எனது காதலனை நான் நம்ப வைத்து இருந்தேன். பிரசவ வலி வந்ததாக பொய் கூறிவிட்டு நான் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு பிறந்து 2 நாள் ஆன ஆண் குழந்தையை பார்த்ததும் அதை எப்படியாவது கடத்தி வந்த வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என நஹனா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.