திருவண்ணாமலையில் கிரிவலம் பௌர்ணமியில் மட்டும் தான் மேற்கொள்ள வேண்டுமா?

இறைவனை வழிபட கால நேரம் கிடையாது.


பௌர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செய்ய வேண்டும் என்று விதி ஏதுமில்லை. தினமும் கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோரும் இருக்கிறார்கள். மலைப் பாதை முழுவதும் இருள் சூழ்ந்திருந்த அந்த நாட்களில் பௌர்ணமி நிலவின் ஒளி துணை இருப்பதால் பௌர்ணமி நாளை கிரிவலம் வருவதற்கு உகந்த நாளாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி மலையில் மீது வளர்ந்துள்ள மூலிகை செடிகளின் மீது விழுந்து எதிரொலிக்கும் கதிர்வீச்சானது காற்றில் கலந்து நாம் அதனை சுவாசிக்கும் போது நமது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஆனால் அனுதினமும் மூலிகை செடிகளின் வாசம் காற்றின் வழியே மலையை சுற்றிலும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

சிவபெருமானின் அம்சமாக விளங்கும் அந்த மலையை கிரிவலம் வருவதற்கு கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சந்திரனை தலையில் சூடியிருக்கும் அந்த பிறை சூடனை பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வது என்பதை சிறப்பு வழிபாடாகக் கருதலாம். அதற்காக பௌர்ணமியில் மட்டும்தான் கிரிவலம் செய்ய வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையை நினைத்தவுடன் கிரிவலம் வருவது என்பதே சாலச் சிறந்தது.