சபாஷ் நாராயண சாமி! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் பரிசு அறிவிப்பு!

மிகவும் சிறப்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் புதுவை முதல் அமைச்சர் நாராயண சாமி.


ஆம், விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும்’ என புதுச்சேரி பட்ஜெட்டில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

பொதுவாக ஒரு விபத்து நிகழ்ந்தால், அருகில் நின்று செல்ஃபியோ, வீடியோவோ எடுக்கும் கொடூர மனம் படைத்தவர்களுக்கு மத்தியில், உயிர் காக்க உதவுபவர்கள் நிறைய பேர் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக இதில் ஆட்டோ டிரைவர்களின் ஈர இதயம் நிறைய உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

ஆனால், இப்படி உதவும் உள்ளங்கள்கூட, நிறைய கேள்விகளை நினைத்து பயப்படுகின்றன. அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றால், மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு அவர்கள் போராட வேண்டியுள்ளது. அடிபட்டவர் யார் என்றே தெரியாத சூழலில்தான் காப்பாற்றுகிறார்கள். ஆனால், விபத்தில் சிக்கியவரின் பாதுகாவலர் போல கருதப்பட்டு விசாரணையை எதிர்கொள்கிறார் இந்தக் காப்பாற்றும் மனிதர். போலீஸ் விசாரணையும்கூட, ‘எந்த சூழலில் நீ காப்பாற்றினாய்? இந்த விபத்துக்குக் காரணம் நீயா?’ என்பதில்தான் ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் பயந்தே நிறைய பேர் விலகி ஓடுகிறார்கள்.

ஆனால், இந்த நடைமுறைகளில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. ‘விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுபவர்கள், தாங்கள் விரும்பினால் மட்டுமே போலீஸ் விசாரணைக்குத் தகவல் அளிக்கலாம். விரும்பாவிட்டால், அவர்களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் எதுவும் கேட்க மாட்டார்கள்’ என்று காவல்துறை சார்பில் அறிவிப்பே வந்துவிட்டது. மருத்துவமனைகளுக்கும் இதேபோன்ற உத்தரவுகள் போய்விட்டன. 

விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தந்தால்தான் உயிர்காக்க முடியும். சில நிமிட தாமதம்கூட உயிரிழப்பில் முடியும்; அல்லது நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால்தான் ஆரம்ப ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை தருவதை ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள். 

விபத்தில் சிக்கியவர்களின் உயிர் காக்கும் மனிதநேய குணமுள்ளவர்களுக்கு பரிசு தருவதன் மூலம், பல உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். விபத்தில் குடும்பத் தலைவரை இழந்து நிர்க்கதியாய் நிற்க நேரும் பல குடும்பங்களின் தலைவிதியை மாற்ற முடியும். 

‘அடுத்தவருக்கு உதவுவது மனிதநேயம். அதற்குப் போய் பரிசு தர வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோமே’ என சமூகத்தை நினைத்து வருந்தாமல், இதன் நேர்மறை விளைவுகளை மட்டும் நினைத்து திருப்தி கொள்ளலாம்.

சபாஷ் நாராயண சாமி. இந்த அறிவிப்பை தமிழகம் மட்டுமின்றி அகில இந்தியாவும் பின் தொடரவேண்டியது அவசியம்.