கொரோனா பாதிப்பில் 5வது இடம்..! உயிரிழப்பில் 10வது இடம்..! சர்வதேச தலைவர்களை திரும்பி பார்க்க வைத்த நாடு..! எது தெரியுமா?

பெர்லின்: கொரோனா வைரஸ் பாதிப்பை ஜெர்மனி மிகவும் கவனமாக கையாளும் விதம் உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது.


உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இதில், உலகம் முழுவதும் 3,08,594 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 13,069 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் சீனா, இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள்  முதல் 4 இடங்களில் உள்ளன. அதேசமயம், ஜெர்மனி 5வது இடத்தில் உள்ளது.  

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,364 எனவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 84 எனவும் உள்ளது. மற்ற வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இத்தாலி போன்றவை கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியாமல் திண்டாடி வரும் சூழலில், ஜெர்மனி மட்டும் அதுதொடர்பான உயிரிழப்பை  மிகவும் கட்டுப்படுத்தி வைத்துள்ளது வியப்பை அளிக்கிறது.  

இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ''பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ்க்கான படுக்கை வசதியுடன் கூடிய  மருத்துவமனைகள் எண்ணிக்கை குறைவு. ஆனால், ஜெர்மனியில் அதற்கான படுக்கை வசதிகள் மற்றும் உரிய மருத்துவ உபகரணங்கள் முன்கூட்டியே தயாராக வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி  தனியார் கிளினிக்குகளில் கூட கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், நோய்த்தொற்று உள்ளவர்கள் உடனடியாக தங்களை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிகிறது. ஜெர்மனியில் ஒருவருக்கு  

காய்ச்சல் ஏற்பட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே ரத்தப் பரிசோதனை செய்து, அவரை தனிமைப்படுத்தி அது மேலும் தீவிரமடையாமல் தடுத்துவிடுகிறார்கள். அத்துடன், பிற நாட்டினர் ஜெர்மனி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே கொரோனாவை தடுக்கும் மருந்தை ஜெர்மனி கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,'' என்று குறிப்பிடுகின்றனர்.