ஜெனிட்டிக் ஆலோசனை - கருக்குழாயில் வளருமா குழந்தை - முதுமையில் பெறும் குழந்தை ஜீனியஸா

வெளிநாடுகளில் திருமணம் முடித்தவுடனே ஜெனிடிக் ஆலோசனை எடுத்துக்கொள்வதை பெண்கள் கடமையாக வைத்திருக்கிறார்கள். இதுதான் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறப்பதற்கு வழிகாட்டுவதாக அமைகிறது.


·         திருமணத்திற்கு முன்பு ஆலோசனை பெறுவது நல்லது என்றாலும் அது முடியவில்லை என்றால் கர்ப்பம் அடைந்த பிறகாவது ஆலோசனை செய்யவேண்டும்.

·         குடும்பத்தில் யாருக்கேனும் பிறவிக் குறைபாடுடன் குழந்தை இருந்தால் நிச்சயம் இந்த ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

·         குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை இல்லை என்றால், அடிக்கடி கர்ப்பம் கலைகிறது என்றாலும் பரம்பரைத் தன்மை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

·         பெற்றோரின் ஜீன் குறைபாடு காரணமாக குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு இந்த ஆலோசனை நிச்சயம் உதவும்.

நெருங்கிய உறவில் திருமணம் முடிப்பவர்களும் 35 வயதுக்கு மேல் தாயாக விரும்புபவர்களும் இந்த ஜெனிட்டிக் ஆலோசனையை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.

 கருக்குழாயில் வளருமா குழந்தை?

குழந்தையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் தாயின் கர்ப்பப்பை. ஆனால் கருவானது சில நேரம் கருப்பையில் வளர்வதற்குப் பதிலாக, கருக்குழாயில் வளர்வது உண்டு. இதை கருக்குழாய் கர்ப்பம் என்கிறார்கள்.

·         முழு செல்லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து இரண்டிரண்டாக பிரியும் நேரத்தில், கருக்குழாய் வழியே நகரவேண்டும்.

·         கருக்குழாய் வழியே நகரும் நூற்றுக்கணக்கான செல்கள் நேரடியாக கருப்பையில் போய் அமர்வதுதான் பாதுகாப்பான கர்ப்பம்.

·         கருக்குழாயில் நோய்த் தொற்று அல்லது ஏதேனும் குறைபாடு இருக்கும்போது கருக்குழாயிலேயே கரு வளரத் தொடங்கும்.

·         கருக்குழாயால் விரியமுடியாது என்பதால் கருவின் வளர்ச்சி பெரிதாகும்போது, வெடித்து கர்ப்பிணி உயிருக்கு ஆபத்து வரலாம்.

அதனால் கர்ப்பம் உறுதியானதும் ஃபெலோப்பியன் குழாயில் கர்ப்பம் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, ஆபத்தில் இருந்து கர்ப்பிணியைக் காப்பாற்ற வேண்டும்.

 முதுமையில் பெறும் குழந்தை ஜீனியஸா?

சின்ன வயதினர் பெற்றுக்கொள்ளும் குழந்தையைவிட, வயதான பெண்கள் பெறும் குழந்தைகள் அறிவு முதிர்ச்சியுடன் இருப்பதாக பேச்சு உண்டு. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.

·         குடும்ப சுமை அல்லது லட்சியம் காரணமாக தம்பதியர்கள் குழந்தைப்பேறு அடைவதை தள்ளிப்போடுகிறார்கள்.

·         வயதானபிறகு இயற்கை முறையில் இல்லையென்றாலும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

·         பெற்றோர் அறிவு முதிர்ச்சியுடன் இருப்பதால், குழந்தையை சிறப்பு கவனம் எடுத்து வளர்க்கிறார்கள்.

·         அதனால் குழந்தை அறிவுஜீவியாக தெரியுமே தவிர, உண்மையில் இளையவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இருப்பதில்லை.

வயதான பெண், குழந்தை பேறுக்கு தயாராகும்போது கூடுதல் இன்னல்களுக்கும் பிரச்னைகளுக்கும் ஆளாகிறாள் என்பதுதான் உண்மை. 18 வயது முதல் 27 வயதுக்குள் பெண் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் நல்லது.