ஹயக்ரீவரை வணங்கும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்..! ஏன் தெரியுமா?

கல்விக் கடவுள் என்று அழைக்கப்படும் லஷ்மி ஹயக்ரீவரை படிக்கும் மாணவர்கள் அறிந்து வணங்கினால் அவர்கள் கல்வியில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.


திருமால் இந்த உலகத்தை சிருஷ்டித்த அன்று முதலில் தனது உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார். ஒருமுறை பெருமானின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் செய்ய ஆசைப்பட்டனர்.

குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம், வர அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைப்பட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள் புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தார் என்றும், அவரை குளிர்விக்க லட்சுமியை அவர் மடியில் அமர்த்தினார்கள்.

இவர் சரஸ்வதிக்கு வேத – ஞான நெறிகளையும், லஷ்மி தேவிக்கு சகல செல்வங்களையும் தந்திடும் மூல மந்திரங்களையும் வசந்த பஞ்சமி அன்று போதித்து உலக மக்களை உய்யச் செய்தார். ஹக்கி என்பதற்கு வடமொழியில் குதிரை என்பது பொருளாகும். திருமால் குதிரை முகம் கொண்டு அவதரித்ததால் அந்த வடிவத்திற்கு ஹயக்ரீவர் என்றும் தனது மடியில் லட்சுமி தேவியை அமரச்செய்து உபதேசித்ததால் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இந்த பூலோகத்தில் அவரிடம் உபதேசம் பெற்றவர் கருட பகவான். ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்கிற மகானுக்கு திருவந்திபுரம் என்னும் தலத்தில் வைத்து உபதேசம் செய்வித்தார். அதன் பயனாக அவர் கல்வியில் சிறந்து விளங்கினார்.

திருவந்திபுரம் ஒரு கல்வி ஸ்தலம் ஆகும். இந்த தலத்திற்கு அவ்வளவு மேன்மை. இங்கு மாணவர்களின் கூட்டம் அனுதினமும் இருக்கும். தேர்வு நாட்களில் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். மேலும் சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள செட்டிபுண்யம், நங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் ஹயக்ரீவருக்கு கோவில்கள் உள்ளன.

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலையும் துளசி மாலையும் அணிவித்து, மாணவர்களின் பேனாவை ஹயக்ரீவரின் திருவடியில் வைத்து வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறப்புறத் திகழலாம். ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து, அந்த தேன் பிரசாதத்தை உட்கொள்வதும், மிகுந்த மகத்துவம் வாய்ந்தது. ஞாபக சக்தி அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி!

‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்'

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.