திடீரென உயிரை விட்ட வீட்டு வேலைக்காரப் பெண்மணி..! அடுத்த நிமிடம் காம்பீர் செய்த நெகிழ வைக்கும் செயல்!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அவரது இறுதி சடங்கை அவரே முன்னின்று நடத்தி உடலை நல்லடக்கம் செய்தார்.


பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது பாஜக எம்பியாக உள்ளார். இவரது வீட்டில் கடந்த 7 வருடங்களாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா ஆவார். 49 வயதாகும் இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே தனது கணவனால் கைவிடப்பட்ட இந்தப் பெண்மணி கௌதம் கம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மூலம் கம்பரின் வீட்டுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார்.

கௌதம் கம்பீர் வீட்டில் வேலை செய்து வந்த சரஸ்வதி பத்ரா என்ற பெண்மணிக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய் இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண்மணி உயிரிழந்தார். இதனையடுத்து கம்பீர் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் இறந்தவரின் உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. மேலும் அவரது உறவினர்களும் டெல்லிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால் உயிரிழந்தவரின் உறவினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கௌதம் கம்பீரே தன்னுடைய வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் இறுதி சடங்கை தானே முன்னின்று செய்து அவரது உடலை நல்லடக்கம் செய்தார். இதைப் பற்றிய செய்தி சில தினங்களுக்கு முன்பு ஒடிசா நாளேடுகளில் வந்தது.

இதன் பின்பு கௌதம் கம்பீர் இந்த சம்பவம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் என் குழந்தையை பார்த்துக் கொள்பவர்கள் எனது வீட்டு வேலைக்காரர்களாக இருக்க முடியாது. அவர் எனது குடும்பத்தை சேர்ந்தவர். ஆகையால் அவருக்கு இறுதி சடங்கு செய்வது எனது கடமை. சாதி மதம் சமூகம் என எதையும் பொருட்படுத்தாமல் கண்ணியத்தை மட்டுமே எப்போதுமே நம்புவது தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கம்பீரின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.