இத்தலத்தில் நடைபெறும் கருட சேவை கண்டால் மறுபிறவி கிடையாது

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.


திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 5 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் 11 திவ்ய தேசம் என்று வழங்குவர். இந்த பதினோரு திவ்ய தேசங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு சம்பவம் உள்ளது.

பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவமிருந்தார் சிவபெருமான். அவர் முன் தோன்றிய திருமால் சிவபெருமானை பலாச வனத்திலுள்ள நாங்கூர் திருத்தலம் சென்று பதினொரு ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் அவ்வாறே செய்தார். அப்போது நாராயணர் பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தை போக்கினார். அதுவும் பதினொரு ருத்ர தோற்றத்திற்கு ஏற்ப தாமும் 11 வடிவங்களுடன் தோன்றினார். அந்த 11 கோலங்களே திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது வரலாறு.

ஒவ்வொரு வருடமும் தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத் திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார்.

அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள். இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை. பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். பின்பு கற்பூர ஆரத்தி காட்டப்படும். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்தந்த பெருமாள்கள் மீண்டும் தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்கு புறப்பட்டுச் செல்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரை சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சத்தமிடும். இந்த சத்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்டதாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கை ஆழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிகம் நெல் விளையும் என்பது நம்பிக்கை ஆகும்.

மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார். பதினோரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து, ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்வார்.

ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த அடியார்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில், பதினோரு பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருவார்கள்.

இந்த 11 பெருமாள்களையும் கருட சேவையில் சேவிப்பது 11 திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டதற்கு நிகராகும். இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது.