நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட தாதா! ரவுடீயிசத்தில் ரூ. 600 கோடி சம்பாதித்தும் காப்பாற்ற வரவில்லை!

பெங்களூரில் 600 கோடி ரூபாய்க்கு அதிபதியான தாதாவை போட்டி ரவுடிக் கும்பல் நடுத்தெருவில் வெட்டிக் கொன்றது.


தாதா லஷ்மணா! பெங்களூரை அச்சத்துக்குள்ளாக்கி வந்த பெயர். தன் சகோதரரான ராமாவுடன் சேர்ந்துகொண்டு மாநகரை ஆட்டிப்படைத்தவர். இவர்கள் மீது நில மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு எதிராக வேறு தாதாக்கள் உருவானால் அவர்களை விட்டுவைப்பதில்லை. கொன்றுவிடுவார்கள் 

கடந்த 2005- ம் ஆண்டு பெங்களூரில் மாச்சா மஞ்சா என்ற மற்றொரு தாதா தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்த போது லஷ்மணா, ராமா உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் நகரையே அதிரச் செய்தது. போலீஸாரும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மிரண்டு போயிருந்தனர். பெங்களூரிலேயே பணக்கார தாதாவான லஷ்மணாவின் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய்.

நேற்று லஷ்மணா தனது இன்னோவா காரில் உலா வந்துகொண்டிருந்தார். மகாலக்ஷ்மி லேஅவுட் என்ற இடத்தில் அவரது காரை 5 பேர் கும்பல் வழிமறித்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் காரை வேகமாக ஓட்டினார். ஆனால் சினிமா பாணியில் விடாமல் துரத்திய அந்தக் கும்பல், மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் அருகே லக்ஷ்மணாவின் காரை மறித்தது.

லஷ்மணா மீது மிளகாய்ப் பொடியை வீசி நிலைகுலையச் செய்த அந்தக் கும்பல், காரில் இருந்து வெளியே இழுத்து ஏராளமான மக்கள் முன்னிலையில் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றது. 

2018-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்த லஷ்மணா, தற்போது, கர்நாடக முதல்வர்  குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியில் இருந்தார். ஆனால் அவர் உயிரிழந்து அனாதைச் சடலமாய் தெருவில் கிடந்த போது கட்சி செல்வாக்கோ 600 கோடி ரூபாய் சொத்தோ உயிரைக் காக்க பயன்படவில்லை.