டெல்லியில் இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம்..! மீண்டும் விலை உயர்வை சந்திக்கப்போகும் பொருட்கள்..!

டெல்லியில் இன்றையதினம் 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தொடர்ந்து மத்திய அரசின் நிதி பற்றாக்குறையால் திணறி வருவதால் இன்றைய தினம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்துவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்து வரும் 4 மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் ரூபாய். 1 லட்சம் கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே விதமான வரி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஜிஎஸ்டி வரியை கடந்து 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகையைவிட குறைவான தொகை வசூல் ஆனதால் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதி தர முடியாமல் மத்திய அரசு திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதி பற்றாக்குறையை தீர்த்து வைப்பதற்காகவே பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஆகையால் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்றைய தினம் ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வரியால் ஒரு லட்சத்து மூவாயிரத்து 492 கோடி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த வருவாய் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு கிடைத்த மூன்றாவது அதிகபட்ச தொகையாக உள்ளது. மேலும் மத்திய அரசு நிர்ணயித்த வரியை பெற இயலாததால் இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஏற்கனவே 5% ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும் ஒரு சில பொருள்களுக்கான ஜிஎஸ்டி 10% உயர்த்தப்படும் என்றும் மேலும் 12% சதவீதம் ஜிஎஸ்டி வழங்கப்படும் ஒரு சில பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி உயர்த்த படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் பல பொருட்கள் கடும் விலை உயர்வை சந்திக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.