பல மணி நேரம் காத்திருப்பு..! ஒரு வழியாக கிடைத்த குவார்ட்டருக்குள் மிதந்தை தவளை..! தலை சுற்றி கீழே விழுந்த குடிமகன்..! சீர்காழி பரபரப்பு!

சீர்காழியில் உள்ள டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலில் தவளை மிதந்து கொண்டிருப்பதை கண்ட குடிமகன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்புக் குறைவாக உள்ள இடங்களில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது பானங்கள் விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 40 நாட்கள் கழித்து மதுபானக்கடைகள் திறக்கப்படுவதால் மது பிரியர்கள் ஒட்டுமொத்தமாக மதுபான கடைக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி எனும் பகுதியில் உள்ள ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் அந்த பகுதிக்கு அருகேயுள்ள ஒருவர் ரம் வகை மதுபானம் வாங்கி சென்றுள்ளார்.

மதுபானத்தை வாங்கியவுடன் அந்த பகுதிக்கு அருகே இருந்த வயல் வெளிக்கு சென்று மதுபானம் அருந்த முயற்சி செய்த அவர் மது பாட்டிலை ஓப்பன் செய்து கப்பில் ஊற்றியுள்ளார். கப்பில் ஊற்றி விட்டு பின்னர் மது பாட்டிலை கீழே வைக்கும் போது அதில் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போன்று உணர்ந்த அந்த நபர் மது பாட்டிலை உற்று நோக்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கி வந்த மது பாட்டில் உள்ளே ஒரு தவளை மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த தவளை மிதந்து கொண்டிருக்கும் மது பாட்டிலை எடுத்துக்கொண்டு மதுபாட்டிலை வாங்கிய டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடையில் வேலை செய்பவரிடம் மது பாட்டிலில் தவளை விழுந்து கிடக்கிறது என்று முறையிட்ட போது அந்த கடையில் வேலை செய்பவர்கள் இந்த சம்பவம் வெளியே தெரியாதவாறு தவளை விழுந்த மது பாட்டிலை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக புதிய மது பாட்டிலை அவரிடத்தில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.