நட்புனா என்னானு தெரியுமா? நண்பர்களை கொண்டாடிய திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், குடும்பம், திரில்லர் போன்ற கதைகளை உள்ளடக்கிய திரைப்படங்களே அதிகமாக வந்தாலும் , தமிழ் சினிமாவில் நட்பை பாராட்டும் வகையில் சில திரைப்படங்கள் அவ்வப்போது வந்தவண்ணமே உள்ளன .


அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த நட்பு பாராட்டும் வகையிலான  சில படங்களை பற்றி நாம் காண்போம் . 

2001ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சூர்யா மற்றும் ரமேஷ்கண்ணா நண்பர்களாக நடித்திருப்பார்கள் . காதல் காமெடி என்ற பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்திருந்தாலும் , நட்பை பற்றி இந்த படம் அதிகமாக கூறியிருந்ததால்  மிகப்பெரிய வெற்றியடைந்தது .

2003 ஆம் ஆண்டு வெளிவந்த பிரியமான தோழி திரைப்படத்தில் ஸ்ரீதேவி மற்றும் மாதவன்  நடித்திருந்தனர் . பொதுவாக திரைப்படங்களில்  ஆண்களின் நட்பை விவரிக்கும் வகையில் தான் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன .

ஆனால்  ஆண் ,பெண் இருவருக்கும் உண்டான நட்பினை இயக்குனர் விக்ரமன் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் .

கல்லூரி நாட்களில் உருவாகும் அழகான நட்பினை பற்றி விவரிக்கும் படம்தான் உள்ளம் கேட்குமே .இந்த  படத்தில் ஷாம் ,ஆர்யா ,அசின்,லைலா போன்றவர்கள் கல்லூரி நண்பர்களாக நடித்திருப்பார்கள் . இந்த படத்தை யார் பார்த்தாலும் அவர்களது கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுக்கு இடையே நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து தோன்றும் வகையில் தத்ரூபமாக இந்த படம் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் ரஜினியும் மம்முட்டியும்  இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தில் சூர்யா - தேவா என்ற கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்தனர் . நட்புக்கு இலக்கணமாய் அமைந்த இந்த படம் இன்னும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது .

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நாடோடி திரைப்படத்தில் நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள் கூட்டம் இணைந்து பல இன்னல்களை சந்தித்து அவர்களை முடிவில் சேர்த்து வைப்பார்கள் .

இது போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நட்பின் ஆழத்தை உணர்த்தும் படங்களாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது .