ஐந்து லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி..! பள்ளி திறக்காவிட்டாலும் அள்ளிக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி.

பள்ளிகள் இன்னமும் தொடங்கவில்லை என்றாலும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது ஏன்ற நல்லெண்ணத்தில், 11 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.


தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002-ஆம் கல்வியாண்டில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. 

பின்பு, 2005-2006ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து 2020-2021-ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துகிறது.  

இந்த ஆண்டு 2,38,456 மாணவர்கள், 3,06,710 மாணவியர், என மொத்தம் 5,45,166 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 9 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள்.