ராமர் கோவிலுக்கு அடிக்கல்… தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அழைப்பு இல்லையா?

இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் அளவுக்கு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவிழாவை கொண்டாட வேண்டும் என்பதுதான் இந்துக்களின் ஆசையாக இருந்தது. ஆனால், கொரோனா எல்லா அரசியல்வாதிகளையும் ஒரே இடத்தில் உட்கார வைத்துவிட்டது.


உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மோடி மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். 

இந்த அடிக்கல் நாட்டுவிழா எப்போது நடைபெறுகிறது என்று தெரியுமா? அடிக்கல் நாட்டும் முகூர்த்தம் (புனித தருணம்) புதன்கிழமை 32 வினாடிகள் மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளனர், அதாவது 12:44:08 முதல் 12:44:40 மணி வரை என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு 175 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டுமே மேடையில் இருப்பார்களாம். 

இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுவதாக இருந்து, கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க.தலைவர்களுக்கும் பிரத்யேக அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் ராமர் கோயிலுக்கு விஜயம் செய்ய இருக்கிறார்களாம்.