வீட்டுச் சிறை! ராணுவம் குவிப்பு! தகவல் தொடர்பு துண்டிப்பு! சாதித்துக் காட்டிய மோடி - அமித் ஷா கூட்டணி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுச்சிறையில் இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வாரத்திலிருந்தே ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாக புரளிகள் வெளியாகி கொண்டிருந்தன. இந்நிலையில் மத்திய அரசானது 35,000 படைவீரர்களை காஷ்மீர் பகுதியில் குவித்தது.

பதற்றநிலை அதிகரித்ததால் காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லாவின் வீட்டில் சந்திப்பு நடத்தினர். இதில் மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர். காஷ்மீர் பகுதியில் சிறப்பாக அந்தஸ்திற்கும் தனித்தன்மைக்கும் கேடு விளைவிக்கும் அனைவர்களையும் எதிர்த்து ஒன்றாக போராடுவோம் என்று தீர்மானத்தை உருவாக்கினர்.

சந்திப்பிற்கு பிறகு பரூக் அப்துல்லா, "எப்பொழுதும் காஷ்மீர் பகுதியில் சிறப்பு அந்தஸ்திற்கு கேடு விளைவிக்க வழிவகுக்க மாட்டோம். அனைவரும் ஒன்று திரண்டு காஷ்மீரின் தனித்தன்மைக்கு கூட விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக பாடுபட வேண்டும். ஒற்றுமையால் மட்டுமே இதனை சாத்தியமாக்க இயலும்" என்று கூறினார். 

தேசிய கான்பரன்ஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா கூறுகையில், "சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீரின் மானப் பிரச்சினையாகும். இதற்கு எதிராக எவர் செயல்பட்டாலும் விபரீதங்களை சந்திக்க இயலும். வசிக்கும் இடத்தின் மீது பற்று இல்லாதவர்கள் தீவிரவாதத்தை தூண்டும் முயற்சிக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டினர் காஷ்மீர் பகுதி மக்களுக்கு அச்சம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். நாட்டின் பிரதமரும் குடியரசுத் தலைவரும் இந்த நிலைமையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில் உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். தகவல் தொடர்பு காஷ்மீர் முழுவதும் துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் உள்துறை அமைச்சரான அமித் ஷா, இன்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இது எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தும் என்று காஷ்மீர் பகுதியில் அரசியல்வாதிகள் எச்சரித்துள்ளனர். இன்று முதல் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரை சுற்றி நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறினாலும் பல்வேறு விஷயங்களில் தனித்து செயல்பட்டு வந்த காஷ்மீர் நிர்வாகம் இனி மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.