தூத்துக்குடியில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்..! பட்டு வேட்டி பட்டு புடவையில் அமர்க்களப்படுத்திய வெளிநாட்டினர்! ஏன் தெரியுமா?

தமிழர்களின் பாராம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்த வெளிநாட்டினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதைப் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர்.


சென்னையில் தனியார் சுற்றுலா நிறுவனம் வெளிநாட்டினர் பங்குபெறும் ஆட்டோ சேலஞ்ச் என்ற சுற்றுலாப் பயண நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பவர் 28ம் தேதி சுற்றுலா தொடங்கியது. இதில் இத்தாலி, நியூசிலாந்து, சீனா, துருக்கி நாடுகளைச் சேர்ந்த 13 பேர் கலந்துகொண்டு ஆட்டோக்களில் 6 அணியாகப் பிரிந்து சென்னை, மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அழைத்து வரப்பட்டனர். அங்கு அந்த 6 அணியினருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி, சட்டை கொடுக்கப்பட்டது. அதை அணிந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.

பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, அதே போன்று பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு குலவைச் சத்தமும் எழுப்பி அசத்தினர். அதன் பின் பொங்கல் வைத்து முடித்த பின், இந்த 6 அணியினரில் சிறப்பாக பொங்கல் வைத்த முதல் மூன்று அணி தெரிவு செய்யப்பட்டு, பரிசு கொடுக்கப்பட்டது.