ஓபிஎஸ் சங்கீத வித்வான் தான்! ஸ்வரம் தெரியாதவர் ஸ்டாலின்! என்று ஜெயக்குமார் பதிலடி!

ஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல என்றும் எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநில வளர்ச்சி  மக்களை முன்னேற்றப் பாதைக்கு எடுத்து செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது. 

ஆனால் காமாலை காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் ஸ்டாலினுக்கு இது வெற்று காகிதமாக தெரியும் என்றும் அதன் சாராம்சங்களை உண்மையில் அவர் அறிவுபூர்வமான சிந்தனையாளராக இருந்திருந்தால் அவரது உள்மனது பாராட்டியிருக்கும்.

தேசிய அளவில் மாநிலத்தின் வளர்ச்சி 8.16 சதவீதம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலையை வைத்து மக்களுக்கு அடிப்படை வசதி அனைத்தும் செய்ய வேண்டும். வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது.

சென்னையின் வளர்ச்சிக்கு 2000 கோடி ஒதுக்கியுள்ளது ஸ்டாலின் கண்ணிற்கு தெரியவில்லையா?  கஜா புயலில் அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாய் 13% உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் டெல்லிக்கு காவடித்தூக்கி எந்த அளவிற்கு இதனை தி.மு.க உயர்த்தியது. அதிமுக ஆட்சியால் மாநில வளர்ச்சி 10% உயர்ந்துள்ளது. 

அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான் பட்ஜெட்டையை துணை முதல்வர் அளித்துள்ளார். சங்கீத வித்வான் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சங்கீத வித்வான்கள் கேவலமானவர்கள் அல்ல. ஸ்வரம் தெரியாதவர் சங்கீதம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. 

ஸ்டாலின் சொன்னது போல இது ஏட்டு சுரைக்காய் பட்4ட் இல்லை, எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் தான் இந்த பட்ஜெட். சென்னை மீன்பிடித்துறைமுகத்தில் ஏற்கனவே பணிகள் நடைப்பெற்று வருகிறது. மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

வேலை இல்லாத திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..சிறு குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் பண்பு உள்ளவராக இருந்தார்கள் என்றும் ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.

இவ்வாறு ஜெயக்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.