ரொம்ப சந்தோசமா இருக்கு..! மக்கள் எங்களுக்கும் ஓட்டு போடுவாங்க..! நெகிழ்ந்த திருநங்கை கவுன்சிலர்!

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றிருப்பது நாமக்கல் மாவட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்ற மாதம் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு ஒன்றியத்தின் 2-ஆம் வார்ட்டில் திமுக சார்பில் ரியா என்பவர் போட்டியிட்டார். இவர் ஒரு திருநங்கை ஆவார். 

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்திலிருந்தே, இவர் தன்னுடைய வார்டில் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரியா கூறுகையில், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தையே சாறும். எனக்கு போட்டியிட வாய்ப்பளித்த கழகத்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் திமுகவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

திருநங்கைகள் தற்போது அதிகாரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர். குஜராத்தில் திருநங்கை மேயராகவும் இருந்துள்ளார். நான் இந்த சிறிய பொறுப்பில் நேர்மையாக செயல்பட்டு எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற வழியில் ஈடுபடுவேன்" என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இந்த வெற்றியானது ஒட்டுமொத்த திருநங்கைகளும் பெருமை கொள்ள வேண்டிய வெற்றி என்பதை அவர்கள் உணர்ந்தால், சமூகம் முன்னேறி செல்ல வழி பிறக்கும்.