குழந்தைக்கு வயிற்றில் இருக்க வேண்டிய குடல் மார்பில் இருந்த பரிதாபம்! சிக்கலான ஆப்பரேசன்! வெற்றிகரமாக செய்து அசத்திய ஈரோடு அரசு டாக்டர்கள்!

1.5 வயது குழந்தைக்கு டிப்ரமேட்டியா அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவமானது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கொங்கம்பாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ரஞ்சித் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 1.5 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையுள்ளது.

15 நாட்களுக்கு முன்னர் இந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மனமுடைந்த பெற்றோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் ரித்திகாவை பரிசோதித்த போது, குழந்தையின் கல்லீரல் முதலிய பிற உறுப்புகள் மார்பு வரை ஏறி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மேலும் மார்பு பகுதியில் அதிக அளவில் சளி குவிந்து கிடந்ததையும் மருத்துவர்கள் அறிந்தனர். உடனடியாக குழந்தைக்கு அரிய வகை அறுவை சிகிச்சையான "டிப்ரமேட்டியா" என்பதை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ரித்திகா முழுவதுமாக குனமடைந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததற்கு பெற்றோர் மருத்துவர்களிடம் நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநராக கோமதி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் வரலாற்றில் முதல் முறையாக 1.5 வயது குழந்தைக்கு டிப்ரமேட்டியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்று பெருமையாக கூறினார்.

இந்த சம்பவமானது கொங்கம்பாளையத்தில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.