மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் பட்னாவிஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது என்று உச்சநீதிமன்றம் இன்று காலை 10:30 மணி அளவில் தீர்ப்பு வழங்க உள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவில் பாஜக தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் உடன் இணைந்து 170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறியது இதனையடுத்து அம் மாநிலத்தின் ஆளுநர் கோஷ்யாரி, பட்னாவிஸ்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் . மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்ந்த அஜித் பவார் மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றதை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது.

170 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்னாவிஸ்க்கு இருந்ததால்தான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக மேத்தா வாதம் செய்தார். அதுமட்டுமில்லாமல் சட்டசபையில் பட்னாவிஸ்க்கு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளதாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்தார். 

ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரவில்லை என்று எதிர்க்கட்சி வழக்கறிஞர் வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று காலை 10:30 மணிக்கு வழங்க உள்ளதாக தீர்ப்பளித்தார்.