திருமணமாகி ஒரே ஒரு வருடம் தான்..! ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! கோவையை அதிர வைத்த சம்பவம்!

ஒரே கயிற்றில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே பொண்ணண்டம்பலம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணுடன் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவரும் கேசவராஜின் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வந்தனர். இன்று காலை நெடுநேரமாகியும் கேசவராஜின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவருடைய அறையின் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது கேசவராஜும், கிருத்திகாவும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும், அடிக்கடி சண்டை போட்டு கொண்டதாகவும், குடும்ப சண்டை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.