மறக்கமுடியுமா தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளை? அஞ்சலி செலுத்துவோம்!

கடந்த மே 22. இந்த உலகமே தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து விரட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடினார்கள்.


ஆனால், அந்தக் கூட்டத்தை வன்முறையாட்டம் என்றது அரசு. அதனால் அமைதியாக  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுக்க சென்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நாளில் 13 பேரும் அதன்பிறகு இருவருமென  15 அப்பாவிகள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அப்படி கொலை செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணை ஆணையம், நீதிமன்ற வழக்கு என கண் துடைப்பு நடக்கிறது.  

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காரணமாக 15 உயிர்களைப் பறிகொடுத்த துயரம் இன்னும் நீங்கவில்லை. அதற்குள்ளாக வேதாந்தாவின் கோரப்பசிக்கு  மோடியும், அடிமை எடப்பாடி அரசும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டனர். தூத்துக்குடியில் மட்டும் ஒலித்துவந்த வேதாந்தா எதிர்ப்புக் குரல் இப்போது, தஞ்சை, நாகை மண்ணிலும் புகுந்துவிட்டது. 

இனியும் தமிழர்கள் அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை. கொடூரமாக இறந்த உயிர்களுக்கு நீதி வேண்டும். ஸ்டெர்லைட் போன்ற உயிர்க்கொல்லி நிறுவனங்கள் நம் தமிழகத்துக்குத் தேவையே இல்லை.  அதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக உயிர் துறந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் வைத்து, அஞ்சலி செய்வோம்!