அழகிரியுடன் மோத ஸ்டாலினுக்கு பயம்! மதுரையை கூட்டணிக்கு தள்ளிவிட்டதன் பின்னணி!

அழகிரிக்குப் பயந்து மதுரையை தாரை வார்த்த ஸ்டாலின்...! சு.வெங்கடேசன் வேட்பாளராம் _ நல்ல எழுத்தாளரை எம்.பி. ஆக்கணுமா... வேண்டாமா?


தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய இரண்டு வேட்பாளரை இன்று அதிரடியாக அறிவித்துவிட்டது. இந்தக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. மதுரையை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதற்குக் காரணம் அழகிரிதானாம்.

மதுரையில் தி.மு.க. நின்றால், அதனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று அழகிரி கடுமையாக வேலை பார்ப்பார். அவரை மீறி ஜெயிப்பது கடினம் என்பதாலே மதுரையை கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுக்கும் முடிவுக்கு ஸ்டாலின் வந்தாராம். 

இப்போது மதுரை தொகுதிக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். இவர், காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். மேலும் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய வேள்பாரி மூலம் புகழ் அடைந்தவர். மிகவும் நல்ல எழுத்தாளர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டவர்.

ஆனால், மதுரை மக்களுக்குத்தான் இப்போது குழப்பம். அதாவது நல்ல எழுத்தாளரான வெங்கடேசனை ஜெயிக்க வைத்தால், அவரால் இனி எழுத முடியாமல் போய்விடும். அதனால் அவரை ஜெயிக்க வைத்து அனுப்பிவைக்க வேண்டுமா அல்லது தோற்கடித்து நிறைய எழுத வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்கள். 

இந்த நிலையில், கோவை தொகுதியை பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பார் கேட்டார். கோவையைக் கொடுத்தால் அவர் நிற்பார் என்பதாலே தொகுதியை கம்யூனிஸ்ட் வசம் தள்ளிவிட்டார் ஸ்டாலின். கோவையில் இப்போது நடராஜன் நிற்கிறார்.

இந்த இரண்டு தொகுதியிலும் நிற்பதற்கு தைரியம் இல்லாத காரணத்தாலே கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க. தாரை வார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உண்மையான காரணம் விரைவில் தெரிந்துவிடும்.