கொரோனா ஊரடங்கு! தந்தையின் உடலை தூக்கிச் செல்ல யாரும் வரவில்லை! தவித்த மகன்! ஒன்று கூடி இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

உயிரிழந்தவரின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய வராத நிலையில், இஸ்லாமியர்கள் சிலர் சடலத்தை தூக்கி சென்ற சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நம் நாட்டில் இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சமூகவியல் கடைபிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்தார். 

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷார் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் தன்னுடைய மகனுடன் அங்கு வசித்து வந்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தாக்குதல் தனக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே ரவிசங்கர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் திடீரென்று மரணித்துள்ளார்.

தந்தையின் மரணம் குறித்து ரவிசங்கரின் மகன் அவர்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தினால் யாரும் இறுதி சடங்கு செய்வதற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய இயலாமல் ரவிசங்கரின் மகன் தவித்து வந்ததை பார்த்து இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் இறுதி சடங்கு செய்ய முன்வந்தனர்.

அவர்கள் ரவிசங்கரின் உடலை சுமந்து இருக்கின்றனர். "ராம் நாம் சத்திய ஹே" என்று முழக்கங்கள் எழுப்பி மயானம் வரை சென்றனர். அங்கு அவருக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்த பின்னர், ரவிசங்கரின் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

ரவிசங்கர் வசித்து வந்த இடம் உத்திரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான "ஆனந்த் விஹார்" என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.