கடனை அடைக்க 18 வயது கூட நிரம்பாத மகனை 28 வயது பெண்ணுக்கு 2வது கணவன் ஆக்கிய தந்தை! வேலூர் பகீர்!

வாங்கிய கடனை அடைப்பதற்காக 18 வயது கூட நிரம்பாத சிறுவனை 28 வயது பெண்ணுக்கு திருமணம் செய்துள்ள செய்தியானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் அரியூர் கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மணிவண்ணனின் உறவினர் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று உறவினர்கள் விரும்புகின்றனர். 

பெண்ணின் பெற்றோர் மணிவண்ணனிடம் "எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு எவ்வளவு பணம், கார், நகை வேண்டுமென்றாலும் தருகிறோம். உங்களுக்கு தெரிந்த நல்ல மணமகன் இருந்தால் கூறுங்கள்" என்று கூறியுள்ளனர். 

கடன் பிரச்சனையில் தவித்து வந்த மணிவண்ணன், பணத்துக்கு ஆசைப்பட்டு 18 வயது கூட நிரம்பாத தன்னுடைய 4-வது மகனை மணிவண்ணன் அந்த 28 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். ஆனால் இந்த திருமணத்திற்கு சிறுவனின் தாயாரும் அவருடைய உறவினர்களும் தடைவிதித்துள்ளனர். ஆனால் மணிவண்ணன் அவர்களை மிரட்டி நிச்சயதார்த்தம் செய்துள்ளார். வருகிற 12-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இந்த சம்பவமானது அப்பகுதியிலுள்ள காவல்துறையினருக்கு சிறுவனின் தாயார் மூலம்  தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் மணிவண்ணனை தொடர்பு கொண்டனர். விசாரணை நடத்திய பிறகு, "21 வயது நிரம்பும் வரை நிச்சயமாக சிறுவனுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது" என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டனர். மீறினால் நிச்சயமாக கைது செய்யபடுவதாக மணிவண்ணனை எச்சரித்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.