மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்! ஈஷா நடத்திய அசத்தல் கருத்தரங்கு!

“மரங்களுக்கு இடையே விவசாயம்; மகத்தான வருமானம்” ஈஷா சார்பில் ஈரோட்டில் ஒரு நாள் விவசாய கருத்தரங்கு.


ஈஷா வேளாண் காடுகள் அமைப்பு சார்பில் “மரங்களுக்கு இடையே விவசாயம்; மகத்தான வருமானம்” என்ற தலைப்பில் ஒரு நாள் விவசாய கருத்தரங்கு டிசம்பர் 22-ம் தேதி கோபியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஈரோட்டில் உள்ள ஒயாசிஸ் ஹோட்டலில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது. இதில் ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன், முன்னோடி இயற்கை விவசாயி திரு.செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

திரு. தமிழ்மாறன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மரங்களுடன் விவசாயம் செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. நீர் ஆதாரம் அதிகரித்து, விளைச்சலும் படிப்படியாக அதிகரிக்கும். மரங்களுக்கு இடையே விவசாயம் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்க முடியும்.

நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விவசாயிகளாக இருப்பதால் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இது உறுதுணையாக இருக்கும். மேலும், மரங்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழலும் மேம்படுகிறது.

இதன்காரணமாக, ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். இதுவரை, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாற்றி இருக்கிறோம். அதில் ஒரு முன்னோடி விவசாயியான திரு.செந்தில் குமாரின் தோட்டத்தில் இம்மாதம் 22-ம் தேதி ”மரங்களுக்கு இடையே விவசாயம்; மகத்தான வருமானம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பல்வேறு முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர உள்ளனர்.

ஐந்தடுக்கு மாதிரி முறையில் விவசாயம் செய்து தொடர் வருமானம் ஈட்டும் வழிமுறை குறித்து பொள்ளாச்சி விவசாயி திரு. வள்ளுவன் பேச உள்ளார். மரங்களுக்கு இடையே மஞ்சள், கரும்பு, நெல், வாழை, சேனை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து மகத்தான வருமானம் ஈட்டும் வழிமுறை குறித்து திரு. செந்தில் குமார் பேச உள்ளார்.

ஊத்தங்கரையைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி திரு. கணேசன் மரங்களை மதிப்பு கூட்டும் வழிமுறை மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்து பேச உள்ளார். நான் வேளாண் காடு வளர்ப்பு வழிமுறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஈஷா விவசாய இயக்கத்தின் பயிற்சியாளர் திரு. முத்துக்குமார் தற்சார்பு விவசாயத்தின் அவசியம் குறித்தும் பேச உள்ளோம்.


முன்னோடி விவசாயிகளின் அனுபவ உரைகளுக்கு பிறகு பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90068, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்மாறன் கூறினார். முன்னோடி விவசாயி திரு. செந்தில் குமார் அவர்கள் பேசுகையில், “மரங்களுக்கு இடையே விவசாயம் செய்வதால் என்னுடைய மஞ்சளின் தரமும் விளைச்சலும் அதிகரித்துள்ளது. முன்பு, ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் மகசூல் எடுத்த நான், இப்போது 25 குவிண்டால் மகசூல் எடுக்கிறேன்.

மேலும், மரங்களுடன் இயற்கை விவசாயத்தில் மஞ்சள் விளைவிப்பதால் அதில் ’குக்குமீன்’ அளவும் அதிகமாக உள்ளது. மரங்கள் இருப்பதால் அதிக மழை பெய்தாலும், மழை இல்லாத வறட்சி காலங்களிலும் விளைச்சல் குறைவது இல்லை. விவசாயிகளின் பொருளாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த மரங்களுடன் விவசாயம் செய்வது அவசியம்” என்றார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஈஷா யோகா மையத்தின் ஈரோடு ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.சங்கரும் உடன் இருந்தார்.