நிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.

நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக கடும் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வி.சுப்பிரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் சாகுபடி பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சாய்ந்துள்ளது. நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உளுந்து, மணிலா பயிரிட்ட வயல்களில் தண்ணீர் நிற்கிறது. சில பகுதிகளில் வாழை சாய்ந்துள்ளது. கரும்பு சாய்ந்துள்ளதால் மகசூல் குறைவு ஏற்படும்.

பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை கேட்டுக் கொள்கிறோம். ஆரம்ப கட்ட விபரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 ஏக்கர், காஞ்சிபுரம் 1500, விழுப்புரம் 5000 ஏக்கர் வரை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முப்பதாயிரம் ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதில் கனிசமான வயல்களில் நெல்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராயிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் நடவு செய்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டு அரவைக்கு வெட்டும் நிலையில் உள்ளன. கனமழை மற்றும் புயல் காற்றினால் கரும்பு சாய்ந்து மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகளில் அரவையை உடனடியாக துவக்கிட வேண்டும். தி

ருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உளுந்து மற்றும் மணிலா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் சில நாட்கள் தண்ணீர் நிற்கும் பட்சத்தில் உளுந்து மற்றும் மணிலா பயிர்கள் அழுகிவிடும். கடலூர், போளூர் தாலுகாக்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல விவசாய கிணறுகளின் சுவர் சரிந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது. எதிர்பார்த்த வேகத்தில் புயல் தமிழகத்தை தாக்கவில்லை என்றாலும், புயல் மழையால் சில மாவட்டங்களில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர்சேதத்தை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.

நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிசம்பர் 15 வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள மாநில அரசு ஆவண செய்திட வேண்டும். புயலால் சேதமடைந்த குடிசைவீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். ஏரிகளுக்கான வரத்துக் கால்வாய்கள் தூர் வாரப்படாதது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே, நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.

புயல் மழையில் பயிர் சேதங்களை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டார்கள் ஏழு மாவட்டங்களில் நெற்பயிர்கள் உட்பட 9468 ஹெக்டேரில் நெற்பயிர்கள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதமடைந்திருப்பதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் சேதம் அதிகம். எனவே, பயிர் சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.