ஃபானி புயல்! 45 ஆயிரம் தன்னார்வலர்களை வைத்து 11 லட்சம் பேரை காப்பாற்றிய பட்நாயக்!

ஒடிசாவில் கரையைக் கடந்த்ஹ ஃபானி புயல் வலுக் குறைந்த நிலையில் வங்க தேசத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு புயலுக்கு 14 பேர் பலியாகியுள்ள்னர்.


ஒடிசாவில் ஃபானி புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் மரங்கள் மின்கம்பங்கள், செல்ஃபோன் கோபுரங்கள் உள்ளிட்டவை பிடுங்கி வீசப்பட்டன. அங்கு நிவாரணப் பணிகள் தொடங்கியுள்ளன.

புயல் கோர தாண்டவம் ஆடிய நிலையில் 11 லட்சம் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்காக 45 ஆயிரம் தன்னார்வலர்களை ஒடிசா அரசு ஏற்பாடு செய்திருந்தது. மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து இந்த தன்னார்வலர்களை மேனேஜ் செய்துள்ளனர்.

இதன் காரணமாகவே மிக குறுகிய காலத்தில் சுமார் 11 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிந்தது. அது மட்டும் இல்லாமல் 900 முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலையும் சுவையான உணவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டு குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்திலும் புயலின் கோர தாண்டவத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 10 ஆயிரம் மரங்கள் சாய்ந்ததால் 58 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. 

ஒடிசா மற்றும் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வரும் நிலையில் நிறுத்தபப்ட்ட ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஃபானி புயலால் பெரிதாக சேதங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலு குறைந்த நிலையில் ஃபானி புயல் வங்கதேசத்தை அடையும் என்று கூறப்பட்ட நிலையில் அங்கு ஃபானி புயலுக்கு 14 பேர் உயிரிழந்தனர். 63 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.