வாக்குப் பதிவு நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்! வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

வேலூரில் தேர்தல் நாளன்று அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏப்ரல் மாதம் தள்ளிப்போன தேர்தல் ஒருவழியாக இன்று வேலூரில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி சண்முகமும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகனான கதிர்ஆனந்தும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இங்கு இவ்விருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது.

இதனிடையே தேர்தல் நடக்கும் நாளான இன்று அதிமுக பிரமுகர் வேலூரில் கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய வயது 35. இவர் மாட்டுவண்டி தொழிலாளி ஆவார். அப்பகுதி அதிமுக நிர்வாகிகளில் இவர் மிகவும் பிரபலமானவர்.

இன்று அதிகாலை தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்துவிட்டு சேண்பாக்கம் ஆர்ச் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கையில் இருந்த கத்தி மட்டும் அரிவாளால் சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேகரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது தேர்தல் நாளான இன்று வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.