ஒரு கிலோ மட்டன் வாங்கினால் வெள்ளிக் காசு இலவசம்! திருச்சி புரட்டாசி ஸ்பெசல் ஆஃபர்!

ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு கிராம் வெள்ளி இலவசம் என்ற அறிவிப்பானது திருச்சி  மாவட்டத்தில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு பிரியர்களாக இருந்தால் கூட இறை நம்பிக்கையினால் மக்கள் அசைவத்தை விரும்ப மாட்டார்கள். கறிக்கடை வைத்து நடத்தும் வியாபாரிகளுக்கு எப்பொழுதுமே புரட்டாசி மாதத்தில் மந்த நிலை ஏற்படுவது வழக்கமாகும். 

இந்நிலையில் இதனை போக்குவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கறிக்கடை வியாபாரி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தாதகாப்பட்டியில் பிறந்தவர் பாபு. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள பிரதான சாலையான பிரபாத் அருகே கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

3 தலைமுறையாக இவருடைய குடும்பத்தினர் கறிக்கடை நடத்தி வருகின்றனர்.இவருடைய கடையில் எப்பொழுதுமே ஒரு கிலோ கறியின் விலை பிற கடைகளை காட்டிலும் 50 ரூபாய் குறைவாகவே இருக்கும். 

ஆனாலும் புரட்டாசி மாதம் என்பதால் இவருடைய கடையில் வழக்கமான அளவிற்கு கறி விற்கப்படுவதில்லை. இதனால் விற்பனையை பெருக்க அசத்தலான அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டார். புரட்டாசி மாதத்தின் தொடக்கத்திலிருந்து தீபாவளி முடியும் வரை அவருடைய கடையில் ஒரு கிலோ மட்டன் கறிக்கு 1 வெள்ளி நாணயம் பரிசாக அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் பிற கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களும் தங்களது மன உறுதியிலிருந்து சற்று சலணமடைந்தனர் என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த வினோத அறிவிப்பானது திருச்சி மாவட்டத்தில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது