கொரோனா பரவும் சென்னையில் இருந்து கோவைக்கு ஊழியர்கள் கடத்தல்..?! ஜிஆர்டி நகைக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

முறையான இ-பாஸ் இன்றி வரவழைக்கப்பட்டு ஊழியர்களை பணியில் அமர்த்திய ஜிஆர்டி நகைக்கடை சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இதனால் வேறு வழியின்றி நேற்று முன்தினம் முதல் 30-ஆம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் பிற மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டு சென்னையில் வசித்து வந்த மக்கள் உயிருக்கு பயந்து மீண்டும் தங்களுடைய பூர்வீக இடத்திற்கு பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு பயணித்தபோது முறையான இ-பாஸ் இன்றி அவர்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு செல்லும்போது மக்கள் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

அவ்வாறு மாவட்டம் விட்டு மாவட்டம் செய்பவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இதற்கிடையே ஜிஆர்டி நகைக்கடை நிறுவனம் ஒன்று சென்னையிலிருந்து 30 பணியாளர்களை கோயம்புத்தூரில் உள்ள கிராஸ்கட் பகுதியில் இயங்கி வரும் நகைக்கடை கிளைக்கு சட்டவிரோதமாக அழைத்து சென்றுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்காது உடனடியாக பணியில் அமர்த்தியுள்ளது.

இதனை கேள்விப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நகை கடைக்கு சென்றனர். பின்னர் அங்கு விசாரணை நடத்தியதில், 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேருந்தில் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு அழைத்து வரப்பட்டதும், அவர்கள் எந்தவித வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தனிமைப்படுத்திக்கொள்ளும் வழிமுறையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது. 

இதன்மூலம் அவர்களுடன் தொடர்பிலிருந்த 193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது‌. அதுமட்டுமின்றி விதிமுறைகளை மீறி செயல்பட்ட தான் ரணமாக வருவாய் அதிகாரிகள் நகைக்கடைக்கு சீல் வைத்துவிட்டனர். மேலும் இ-பாஸ் இன்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தையும் வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.