காய்ச்சல்! இருமல்! சளிக்கு ட்ரீட்மெண்ட்..! பெண்ணிடம் ரூ.64 ஆயிரம் பில் போட்ட RPS ஹாஸ்பிடல்!

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி 64 ஆயிரம் ரூபாய் பில் அளித்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னையிலுள்ள கொரட்டூரில் ஆர்.பி.எஸ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 11-ஆம் தேதியன்று சரோஜா என்ற பெண் காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பல்வேறுவிதமான பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு சரோஜாவுக்கு டைபாஃய்டு காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவரை உடனடியாக ஐசியூவில் அனுமதித்துள்ளனர்.

6 மணி நேரம் ஐசியூவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், அவரை சாதாரண வார்டிற்கு மாற்றியுள்ளனர். 3நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சரோஜாவுக்கு உடல்நிலை சரியானது. தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யும்படி சரோஜா சண்டை போட்டதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுத்தனர்.

டிஸ்சார்ஜ் செய்யும்போது 64,713 ரூபாய்க்கான சீட்டை சரோஜாவிடம் கொடுத்துள்ளனர். அதை பார்த்தவுடன் சரோஜாவின் உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ஐசியு டாக்டர்கள், ஐசியு செவிலியர்கள், டியூட்டி டாக்டர்கள், வார்ட் செவிலியர்கள், ஐசியு ரூம் வாடகை, அல்ட்ராசவுண்ட் மற்றும் இதர பரிசோதனைகள் என்று 64,713 ரூபாயை குறிப்பிட்டிருந்தனர்.

உடனடியாக சரோஜாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கப்போவதாக கூறினர். அப்போது அவர்களை சமாதானம் செய்து கொள்வதற்காக 15,000 ரூபாயை குறைத்து கொண்டுள்ளனர். ஏற்கனவே முன் பணம் செலுத்திய 15 ஆயிரம் ரூபாயையும் குறைத்து, 28,713 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

குறிப்பிடப்பட்ட பணத்தை செலுத்திய பின்னர் சரோஜா தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்த போது, இந்த சம்பவம் குறித்து தங்களுடைய சேர்மேன் மட்டுமே பதிலளிப்பார் என்று கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது கொரட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.