வீட்ல இருந்தே வேலை பாருங்க! ஆஃபீஸ் பக்கமே வராதீங்க! சென்னையில் கொரானாவால் ஊழியர்களுக்கு அடித்த லக்! எந்த கம்பெனி தெரியுமா?

கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தில் பிரபல நிறுவனமானது சென்ற வாரத்தில் இருந்தே பணியாளர்களை வீட்டில் இருக்கும்படி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 4400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை பொத்தேரியில் "ஸோஹோ" என்ற பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர்களை சென்ற வியாழக்கிழமை முதல் வீட்டிலிருந்தே பணிபுரியும்படி (வொர்க் ஃப்ரம் ஹோம்)  நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஒரு நிர்வாகி கூறுகையில், "சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று நாங்கள் அனைவரும் வேலை முடித்து வீட்டிற்கு சென்றுவிட்டோம். வீட்டிற்கு சென்ற பின்னர் எங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் அடுத்த நாள் முதல் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு மெயில் அனுப்பப்பட்டது. 

இது குறித்து கேட்டறிந்த போது, "அந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து 2 பயணிகள் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு பணியிடத்திற்கு வந்ததாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினர். ஆதலால் சில நாட்களுக்கு ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 5,000-க்கும் மேற்பட்டோர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். சில முக்கியமான நபர்கள் மட்டும் அவ்வப்போது அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்" என்று கூறினார்.

அறிகுறிகளோடு பணியிடத்திற்கு வந்த 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பானது ஊழியர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.