பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பா.ஜ.க.வில் ஐக்கியம்..! தேர்தல் பிரசாரத்துக்கு ரெடி

சினிமா கலைஞர்களை வலைவீசிப் பிடித்து கட்சியில் சேர்த்துவருகிறது தமிழக பா.ஜ.க. நடிகர் அர்ஜூன் பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார்.


இதுவரை நடிகை குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், ராதாரவி, சிவாஜி மகன் ராம்குமார், நடிகர் அனுமோகன், நடிகர் எஸ்.வி.சேகர், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா என்று பெரிய பட்டாளமே அங்கு இருக்கிறது. அவர்களுடன் இணைந்திருக்கிறார் செந்தில்.

இன்றும் கவுண்டமணி _ செந்தில் நகைச்சுவையை ரசிக்கும் மிகப்பெரிய கூட்டம் தமிழகத்தில் உள்ளது. செந்திலின் வாழைப்பழ காமெடி, பெட்ரோமாக்ஸ் காமெடி போன்றவை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் நடிகர் செந்தில். வீட்டில் கோபித்துக்கொண்டு 13-வது வயதில் சென்னைக்கு வந்த செந்தில் ஆரம்பத்தில் எண்ணெய் கடை, மதுக்கடைகளில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு நாடகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1979ம் ஆண்டு ஒரு கோயில் இரு தீபங்கள் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் கவுண்டமனியுடன் சேர்ந்து நடித்தபின்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.

தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி என்றுதான் கவுண்டமனி, செந்தில் புகழப்பெற்றனர். இவருக்கு அரசியல் ஆர்வமும் அதிகம். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையிலும் அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளராக இயங்கி வந்தார் செந்தில். அவருக்கு அ.தி.மு.க.வில் நல்ல வரவேற்பு இருந்தது. ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அமைப்பு செயலாளராக மாறினார். ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,

அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அதனால், நீண்ட நாட்களாக செந்தில் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தவர், இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். 

மோடியின் தலைமையை ஏற்று பா.ஜ..க.வில் இணைகிறேன் இங்கு எல்லாமே நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் செந்தில். தேர்தல் நெருங்கிவிட்டதால், தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரம் செய்வதற்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார் செந்தில். அவரை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளுமா என்பதைப் பார்க்கலாம்.