சமூக இடைவெளியை பின்பற்றி வாழைப்பழம் வாங்கிய குரங்குகள்..! நடிகரை நெகிழ வைத்த நிஜ சம்பவம்!

பிரபல சினிமா நடிகர் உணவளித்த போது குரங்குகள் சமூக விலகலை கடைபிடித்து உண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கர்நாடகா மாநிலத்தில் சிக்கபள்ளாப்பூர் எனும் இடத்திற்கு அருகே நந்திமலை அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு சுற்றுலாவாசிகள் உணவளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த இடத்திற்கு தற்போது பொதுமக்கள் அல்லது சுற்றுலாவாசிகளால் செல்ல இயலவில்லை. இதனால் குரங்குகள் உணவின்றி தவிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை பார்த்த பலருள் ஒருவரான கன்னட நடிகர் சந்தன்குமார், குரங்குகளுக்கு உதவவேண்டும் என்று குறிப்பிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டார். அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு நந்திமலைக்கு சென்று 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழம் வழங்கி உணவளித்து மகிழ்ந்தார். குரங்குகளும் சமூக விலகலை கடை பிடித்தவாறு தள்ளி நின்று உணவை சாப்பிட்டு சென்றன

இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் "சமூக விலைகளை குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம். மனிதர்கள் எப்போது இந்த சமூக விலகலை கற்று கொள்ளப்போகிறார்கள். கூட்டமாக வரும் மக்களை சமாளிப்பதை காட்டிலும், 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதாக உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது சமூகவலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.