ஆசாரி இன மக்களை இழிவுபடுத்திய விஜய் டிவி! அரண்மனைக் கிளி சீரியலுக்கு எதிராக கொந்தளிக்கும் விஸ்வகர்மா பேரவை!

சின்னத்திரை தொடரில் நகை செய்யும் ஆசாரிகளை பற்றி தவறாக பேசியதால் அகில இந்திய விஷ்வகர்மா பேரவை புகாரளித்துள்ளது.


விஜய் டிவியில் பல்வேறு சின்னத்திரை தொடர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அவற்றுள் "அரண்மனைக்கிளி" தொடரும் ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே எதிர்பாராவிதமாக இந்த தொடர் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

சென்ற மாதம் 29 ஆம் தேதி அன்று வெளியான எபிசோடில் நகை செய்யும் ஆசாரிகளை பற்றி இழிவாக பேசப்பட்டுள்ளது. அன்றைய எபிசோடில் ஆசாரி ஒருவர் தாலி செய்து எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

அந்த வீட்டிலுள்ள பெண்ணொருவர் தாலி எடுத்து வந்த ஆசாரியை சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார். அவருடைய காலை வெட்டி விடுவேன் என்றும், அவர் வீட்டுக்கு வந்த பின்பு மரியாதையின்றி பேசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இதற்கு பொற்கொல்லர்கள் சமுதாயத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அகில இந்திய விஸ்வகர்மா பேரவையும் தங்களது எதிர்ப்பு குரலை உயர்த்தியுள்ளது. "ஆசாரி சம்பந்தமாக பேசப்பட்ட அனைத்து வாசகங்களையும் நீக்க வேண்டும்.

ஆசாரிகளை பற்றி அவதூறாக பேசியதால் பொற்கொல்லர்கள் சமுதாயத்திடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் அமைப்பினர் ஒன்றாக திரண்டு அறவழிப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும்" என்று அறிக்கை விட்டுள்ளனர்.

இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடர் தற்போது மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது.