பிரபல கதாநாயகர்களுக்காக பாடல் வரிகள் எழுதிவந்த பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
பாடலாசிரியர் முத்து விஜயன் திடீர் மரணம்..! விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலை எழுதியவர்!

90-களில் பல முன்னணி கதாநாயகர்களின் காதல் பாடல்கள் வரிகள் எழுதி கொடுத்த பெருமை முத்துவிஜயனையே சாரும். அவர் எழுதிக் கொடுத்த பாடல் வரிகள் இன்றுவரை ரசிகர்களின் காதிற்கு தேன் போன்று அமைந்துள்ளது.
இளையதளபதி விஜய் அவர்களுக்கு "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில், "மேகமாய் வந்து போகிறேன் மிண்ணலா உன்னை தேடினேன்" என்ற பாடலை எழுதியவர் இவரே. இந்தப்பாடல் அப்போதைய காதலர்களுக்கு மிகவும் இனிமையாக அமைந்தது. இவர் கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். தேன்மொழியை பிரிந்த பின்னர் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தில் இவர் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று நடிகர் பிரபுதேவாவிற்கு, "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா; நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா" என்ற பாடலையும் எழுதியிருந்தார். இவர் இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் இயக்குநராகவும் கூட செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீப காலங்களில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. மஞ்சள் காமாலை நோயால் அவருடைய கல்லீரல் மிகவும் பாதிக்கப்பட்டு இறுதியில் செயலிழந்து போனது. நேற்று மாலை 4 மணியளவில் அவர் உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை 4 மணியளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.