1 லட்சம் பேரை வேலையை விட்டு தூக்கிய ஐபிஎம்! அதிர வைக்கும் காரணம்!

நிறுவனத்தை ட்ரெண்டிங்காக மாற்றி கொள்வதற்கு ஐபிஎம் நிறுவனம் ஒரு லட்சம் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனத்தில் ஒன்று ஐ.பி.எம். இந்த நிறுவனமானது உலகெங்கும் பரவியுள்ளது. இந்நிலையில் தற்போதைய உலகச்சூழலுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஐ.பி.எம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிக்கோளை அடைவதற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ஊழியர்களை கடந்த 5 ஆண்டுகளில் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த தகவலானது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

ஆனால் பணியிடை நீக்கம் செய்வதில் நிறுவனமானது முறையற்ற செயல் படுவதாக தகவல்கள் கசிந்தன. மேலும் ஜோனதான் லாங் என்பவர் இந்த பிரச்சனையை வழக்காக தொடர்ந்தார். அதில் அவர், "பணியிடை நீக்கம் செய்வதை ஐ.பி.எம் நிறுவனம் சரிவர செய்வதில்லை. நிறுவனத்தில் பணிபுரியும் முதியவர்களை பணியிடை நீக்கம் செய்துவிட்டு இளைஞர்களை பணியமர்த்துவது என்பது ஈவிரக்கமற்ற செயலாகும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கின் விசாரணையில், ஐ.பி.எம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவரான ஆலன் வைல்ட் என்பவர் ஆஜரானார். அவர் கூறுகையில் கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்களை போன்று ஐ.பி.எம் "கூல் அன்ட் டிரெண்டிங்காக" மாற்றி அமைக்கப்பட போகிறது. இதனால் நாங்கள் பணியிடை நீக்கம் முறையை கையாளுகின்றோம். வருடத்திற்கு 8000 பேர் புதிதாக நிறுவனத்தில் நுழைகின்றனர். இதனை சமப்படுத்துவதற்காக பணியிடை நீக்கம் முறை உபயோகப்படுகின்றது.

ஆனால் இந்த முறையில் இதுவரை தாங்கள் எந்த வித வயது பாகுபாட்டையும் பார்க்கவில்லை என்று உறுதியாக  பதிலளித்துள்ளார். ஆகையால் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு பணியிடை நீக்கம் முறை கையாளப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த செய்தியானது ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.