மதுபானம் வாங்குபவர்களுக்கு பிரத்யேக பாஸ்..! மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கஷ்டத்தை போக்க முதலமைச்சர் உத்தரவு!

திருவனந்தபுரம்: மதுப்பழக்கத்தை கைவிட முடியாமல் துடிக்கும் மக்களுக்கு சிறப்பு பாஸ் வழங்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.


கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால், மது கிடைக்காமல் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, கணிசமான அளவில் மக்களுக்கு மது விற்பனை செய்ய கேரள அரசு தீர்மானித்து, அதற்கான அனுமதியும் வழங்கியுள்ளது. இந்நிலையில், யார் யாரெல்லாம் மது வாங்கி குடிக்கலாம் என்பதற்காக தகவலை கேரள அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதில் இருந்து விடுபட நினைப்பவர்கள், ஆனால், மது இல்லாமல் நடுக்கத்திற்கு ஆளாபவர்கள் உள்ளிட்டோர் தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆரம்ப மற்றும் குடும்ப சுகாதார மையங்கள், தாலுக்கா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், சிறப்பு தனியார் மருத்துவமனைகள் போன்ற மருத்துவ மையங்களுக்குச் சென்று,

தங்களுக்கு மது அருந்தாவிட்டால், உடல் நடுக்கம் ஏற்படும், ஓரளவு மது அருந்துவது அவசியம்,  என்பதை வலியுறுத்தும் வகையில் மருத்துவ பரிசோதனை செய்து, அதன்பேரில் டாக்டரிடம் பரிந்துரை சீட்டு வாங்கி வர வேண்டும். அந்த சீட்டை, மது வாங்குவதற்கான சிறப்பு பாஸ் போல அரசு கருதுகிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான அளவு மதுபானத்தை வாங்கிக் கொள்ளலாம், என்று கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.  கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் இத்தகைய சிறப்பு அனுமதி தரப்படுமா, என்பதே நம்மூர் குடிமகன்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.